சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: கோடநாடு வழக்கு விசாரணையை காலம் கடத்தும் முயற்சி-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது, இந்த வழக்கை காலம் கடத்தும் முயற்சி ஆகும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
ஓமலூர்:
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51-வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் 38 பேர் உள்ளனர். இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் விவாதிக்கவில்லை. ஆனால் பா.ஜனதா கூட்டணி ஆட்சியின் போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினைக்காக தமிழக மக்களின் நலன் கருதி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தி குரல் கொடுத்தனர்.
தற்போது தி.மு.க. எம்.பி.க்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஏன் குரல் கொடுத்து பணிகளை துரிதப்படுத்தவில்லை?. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளோம். மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
காலம் கடத்தும் முயற்சி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். அந்த வழக்கில் சிறைக்கு சென்றவர்களை ஜாமீன் எடுத்தது தி.மு.க.வினர். தி.மு.க.வினருக்கும், குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன.. பல குற்ற வழக்குகள் கேரள மாநிலத்தில் உள்ளன. அந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் முடிவானது, வழக்கை காலம் கடத்தும் முயற்சி ஆகும். அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது அவதூறு கூறும் ஜே.சி.டி. பிரபாகர், கோவை செல்வராஜ் போன்றவர்கள் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், சந்திரசேகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.