என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணம் பறிப்பு
ஸ்ரீரங்கம் அருகே என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணத்தை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் அருகே என்ஜினீயரை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணத்தை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரிவாளால் வெட்டி...
திருச்சி காட்டூர் கணேஷ் நகரை சேர்ந்தவர் உதயன் (வயது 38). என்ஜினீயரான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர் அவரை வழிமறித்தனர்.
பின்னர், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் உதயனின் தலையில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போன், மடிக்கணினி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பணம்-செல்போன் பறிப்பு
இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, உதயனை அரிவாளால் வெட்டி பணம், செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை பறித்துச்சென்றது, சூரியூர் கும்பக்குடி பகுதியை சேர்ந்த வசந்த் (28), திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்கி (23), சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.