வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகை திருட்டு

குளித்தலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 12 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-16 19:21 GMT

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி

கரூர் மாவட்டம், குளித்தலை கீழமுதலியார் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (வயது 82). நடராஜன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவரது கடைசி மகனான நாராயணன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. மூதாட்டி தனது கடைசி மகனான நாராயணன் என்பவருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். நாராயணன் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.

அவர் தினசரி வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். அதுபோல நாராயணன் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் தனது வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது அவரது தாயார் திரிபுரசுந்தரி படுக்கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

தீவிர சிகிச்சை

மேலும் அவரது தலை மற்றும் நெற்றி பகுதியில் அடிபட்ட ரத்த காயம் இருந்துள்ளது. அவரது 2 காதுகளும் அருந்தநிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்த நாராயணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவரது திரிபுரசுந்தரியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

12 பவுன் நகைகள் திருட்டு

வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடி செல்லும் நோக்குடன் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி நெற்றி மற்றும் தலைப்பகுதியில் அடித்து காயப்படுத்தி அவர் காதில் அணிந்திருந்த 2 பவுன் மாட்டலுடன் கூடிய தோடை அப்படியே பிய்த்து எடுத்து, அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, கையில் அணிந்திருந்த 3 பவுன் வளையல்கள் உள்பட 12 பவுன் எடை கொண்ட தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பரபரப்பு

பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மூதாட்டியை அடித்து காயப்படுத்தப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்