விருத்தாசலத்தில்கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவிடாமல் இளம்பெண் மீது தாக்குதல்உறவினர்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவிடாமல் தடுத்து இளம்பெண் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது உறவினர்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-22 20:01 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜசேகர் (வயது 32). இவரது மனைவி சரண்யா (25). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை.

ராஜசேகர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சரண்யா விசலூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று, ராஜசேகர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார்(24), பிரகாஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பொன்னேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டி சென்றார்.

பொன்னேரி ரவுண்டானாவை கடக்கும் போது, அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த 3 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ராஜசேகர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல்

இதுபற்றி அறிந்த சரண்யா தனது கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த உறவினர்களுடன் நேற்று கார்குடல் கிராமத்திற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த ராஜசேகரின் உறவினர்கள் திடீரென சரண்யாவை திட்டி தாக்கி, கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க விடாமல் தடுத்தனர். இதை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களையும் ராஜசேகரின் உறவினர்கள் தாக்கினர்.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த சரண்யா தனது உறவினர்களுடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சரண்யா, தனது கணவரின் இறுதி சடங்கில் என்னை பங்கேற்க விடாமல் தடுத்து என்னையும், உறவினர்களையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு, போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதற்கிடையே, ராஜசேகரின் உடலை அவரது உறவினர்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்துவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்