விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் தந்தை-மகன் கைது
அஞ்சுகிராமம் அருகே விசாரணைக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.;
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே விசாரணைக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
விபத்து
அஞ்சுகிராமம் அருகே உள்ள பொட்டல்குளத்தை சேர்ந்தவர் ஞானசந்திரன் (வயது 32), சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் ஜோசப் பிரின்ஸ் (30), டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இருவரும் உறவினர்கள். நேற்று முன்தினம் ஜோசப் பிரின்ஸ் ஓட்டி வந்த டெம்போ, அழகப்பபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும், அது சம்பந்தமாக ஞானசந்திரன் சமரசம் பேசி முடித்து ஜோசப் பிரின்சை அவர் வீட்டில் விட சென்றார். அப்போது டெம்போவை பார்த்து ஓட்டக்கூடாதா? என்று ஞானசந்திரன் கூறியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப் பிரின்ஸ் திடீரென்று ஞான சந்திரனை தாக்கியதாகவும் தெரிகிறது.
விசாரணை
இதுபற்றி ஞானசந்திரன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திர ராஜன் ஜோசப் பிரின்ஸ் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றார்.
அங்கு அவர் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போது, சமுத்திரராஜனின் சீருடையை பிடித்து இழுத்து ஜோசப் பிரின்ஸ் மற்றும் அவருடைய தந்தை ரத்னகுமார் (63) ஆகியோர் தாக்கி, காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சமுத்திரராஜன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜோசப் பிரின்ஸ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.