தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்
திசையன்விளையில் தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளையை சேர்ந்தவர் முகமது இம்ரான்கான் (வயது 29). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பெட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்த மகராஜன் (50) என்பவர் வாங்கிய கடனை குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடன் தொகையை கேட்டு முகமது இம்ரான்கான், மகராஜன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மகராஜன் தவணை தொகையை கட்ட மறுத்து முகமது இம்ரான்கானை அவதூறாக பேசி அருகில் கிடந்த செங்கல்லால் தாக்கியதாகவும், மேலும் அருகில் நின்ற கங்காதரன் (25), கபிலன் (22) ஆகியோரும் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முகமது இம்ரான்கான் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு பதிந்து, மகராஜன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்.