தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

சேலத்தில் தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-06 19:45 GMT

கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பஸ் ஒன்று வந்தது. அம்மாபேட்டை மணல்மேடு பஸ் நிறுத்தம் பகுதியில் அந்த பஸ் நின்றபோது பஸ்சில் 6 பேர் திடீரென ஏறினர். பின்னர் அவர்கள் பஸ் கண்டக்டர் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். தனியார் பஸ்சில் கண்டக்டரை கும்பல் தாக்கும் காட்சி பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பஸ்சில் வந்த மாதங்கி தாசன் என்ற பயணியை, ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி, இருக்கை மாறி அமரச் சொல்லியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து மணல்மேடு பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் கண்டக்டரை தாக்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாதங்கி தாசன், சபரி, சுபாஷ், மதன், மணிகண்டன், தனுஷ் ஆகிய 6 பேரை நேற்று அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்