பஞ்சாயத்து செயலாளர் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே பஞ்சாயத்து செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கோமானேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 53). கோமானேரி பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றிய இவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு பழங்குளத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கோமானேரியைச் சேர்ந்த இசக்கி மகன் பரமசிவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று கோமானேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றை கணினியில் பதிவேற்றம் செய்வதற்காக இசக்கியப்பன் அங்கு பணிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த பரமசிவன், இசக்கியப்பனிடம் நீ எப்படி இங்கு வரலாம்? என்று கூறி தகராறு செய்து தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற இசக்கியப்பனின் சகோதரர் மணிகண்டனையும் பரமசிவன் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பரமசிவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
---