அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்

பெருமுகையில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-14 18:35 GMT

வேலூர்

வேலூரை அடுத்த பெருமுகையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு பெருமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வராஜ் (வயது 30) என்பவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்தார்.

வகுப்பறைக்குள் புகுந்த அவர் மாணவ-மாணவிகளுக்கு பிஸ்கெட் கொடுக்க முயன்றதாகவும், அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அவரை வகுப்பறையில் இருந்த ஆசிரியர் தடுத்து நிறுத்தி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அதனை ஏற்காத அவர், ஆசிரியரிடம் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் மாணவர்கள் பயந்து அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பால்ராஜ் அங்கு சென்று கலாட்டாவில் ஈடுபட்ட செல்வராஜிடம் மாணவர்கள் உன்னை பார்த்து பயப்படுகிறார்கள்.

எனவே பள்ளியை விட்டு வெளியே செல்லும்படி அறிவுறுத்தினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் திடீரென தலைமை ஆசிரியரின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் அணிந்திருந்த கண்கண்ணாடி உடைந்து முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்