கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல்: ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன்

கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-06 20:30 GMT


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தங்கப்பாண்டியன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2-ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில், வன்னியம்பட்டி விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிராம சபை கூட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

ஆனால், கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொது இடத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன் விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தாக்குதலுக்கு உள்ளானவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. வாரம் ஒரு நாள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்