காரில் சென்ற டாக்டர் மீது தாக்குதல்

முத்துப்பேட்டை அருகே காரில் சென்ற டாக்டர் மீது தாக்குதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-07-05 17:47 GMT

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் டாக்டர் இம்ரான்கான் (வயது 32). இவர் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று விட்டு அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் சங்கேந்தி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார் அப்போது எடையூர் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மகாதேவன், ராஜேந்திரன் மகன் பிரதீப் (30), மன்னார்குடியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராஜகார்த்திக் (32), எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக நடு ரோட்டில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களது பின்னால் கார் சென்று கொண்டிருந்தபோது வழிகேட்டு டாக்டர் இம்ரான்கான் ஒலி எழுப்பியுள்ளார். அதனை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. நீண்டநேரமாக அவர்கள் வழிவிடாததால் காரை சாலையோரம் மண் சாலையில் இறக்கி டாக்டர் அவர்களை முந்தி சென்றார். இதனால், ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் அந்த காரை துரத்தி சென்று வழிமறித்து டாக்டரை தாக்கியுள்ளனர். மேலும் காரில் இருந்த அவரது மனைவி, தாய், தங்கை, மைத்துனர் ஆகியோரை திட்டியும் அந்த வாலிபர்கள் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடையூர் போலீசில் டாக்டர் இம்ரான்கான் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகார்த்திக், பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மகாதேவன், விஜய் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்