அரசு பஸ்சை வழிமறித்து மாணவர்கள் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அருகே அரசு பஸ்சை வழிமறித்து மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே அரசு பஸ்சை வழிமறித்து மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அருகே உள்ள புதூர்புங்கனை கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை அரசு டவுன் பஸ்சில் ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். பொம்மட்டி அருகே மர்ம நபர்கள் பஸ்சை வழிமறித்து உள்ளே இருந்த கல்லூரி மாணவர் சுரேஷ், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விஷால், பள்ளி மாணவர்கள் விக்னேஷ், மவுலிதரன், திருப்பதி, தினகரன், முகுந்தன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அந்த நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதில் மாணவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் காயம் அடைந்த மாணவர்களை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர்கள் பட்டியல் இனத்தவர்கள் என்பதால் சாதி, மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஒரு வாரமாக இந்த அரசு பஸ்சில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்க அரசு டவுன் பஸ்சை பொம்மட்டி வழியாக இயக்காமல் தண்ணீர் பந்தல்,கீழ்குப்பம் வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்