ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.டி.எம்.மையங்கள் உள்ளன. இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை தினமும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அங்கு பணம் எடுக்க பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்குள்ள கதவு, எந்திரங்கள் உள்ளிட்டவற்றை தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வேறு யாரும் செல்லாத வகையில் இளைஞர்கள் கயிறு கட்டி முன் எச்சரிக்கை ஏற்பாடு செய்தனர்.
மழையின் காரணமாக மின்கசிவு இருக்கலாம் என்றும் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.