ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை முயற்சி
ஈரோடு சத்தி ரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையமும் உள்ளது. கடந்த 5-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும், ஏ.டி.எம். எந்திரத்தையும் மீது பெரிய கல்லை போட்டு உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
அப்போது, ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஏ.டி.எம் மையத்தில் இருந்து மணி ஒலிப்பதை கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த மர்ம நபரின் கைரேகைகளை சேகரித்தனர். இதற்கிடையில் ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஈரோடு அசோகபுரம் அய்யங்காடு பகுதியை சேர்ந்த தறிபட்டறை தொழிலாளியான ராஜா என்பவருடைய மகன் ராகுல் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராகுலை போலீசார் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். கைதான ராகுல் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.