ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.16 ஆயிரம் மோசடி

ஒடுகத்தூரில் விவசாயியின் ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து ரூ.16 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-18 17:11 GMT

பணம் எடுக்க சென்றார்

ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). விவசாயி. பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகின்றார். ஒடுகத்தூரில் உள்ள ஒரு வங்கியில் மாதன்தோறும் பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒடுகத்தூரில் வங்கி அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு முன் நின்றிருந்த நபரிடம் தனது கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் எடுத்துக்கொடுக்கும்படி கூறி அவரது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று கூறி, மற்றொரு ஏ.டி.எம். கார்டை செல்வத்திடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

ரூ.16 ஆயிரம் மோசடி

சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது மர்ம வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதற்கு வங்கி ஊழியர்கள் வங்கி கணக்கு புத்தகம் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.

இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலரசம்பட்டில் இருக்கும் வீட்டுக்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வருவதற்குள், அந்த மர்ம நபர் குருவராஜ பாளையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செல்வத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.16 ஆயிரத்தை எடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்