ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.1½ லட்சம் திருடிய என்ஜினீயரிங் மாணவர்

ஓய்ரு பெற்ற சப்-இன்ஸ்பெரிடன் ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.1½ லட்சம் திருடிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-19 18:31 GMT

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்

அரக்கோணத்தை அடுத்த ராமதாஸ் நகரை சேர்ந்தவர் விநாயகம். அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம்- சோளிங்கர் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி விநாயகத்தின் ஏ.டி.எம். கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, போலியான கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ரூ.1½ லட்சம் திருட்டு

பின்னர் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் க்ரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரமாக நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

என்ஜினீயரிங் மாணவர்

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 20) என்பதும், சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படிப்பதும், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருபவரிடம் நைசாக பேசி அவர்களின் கார்டுகளை வாங்கிக் கொண்டு போலி கார்டுகளை கொடுத்து பணம் திருடி செல்வதும் தெரியவந்தது.

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் விநாயகத்திடமும் ஏமாற்றி பணம்திருடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சித்தூர், கடப்பா போலீஸ் நிலையத்தில் இதே போன்று ஏ.டி.எம்.மில் பணம் திருடியதாக 6 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்