ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது
பொதுமக்கள் தவறவிடும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி ஏ.டி.எம். மெஷின் மூலமாக ஸ்வைப் செய்து பணத்தைத் திருடி வந்தார்.;
சென்னை,
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கார்த்திக்வேந்தன் (வயது 32). இவர், சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியதாவது:-
என்னுடைய வங்கி ஏ.டி.எம். கார்டு தொலைந்து போய்விட்டது. அந்த கார்டை பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11 ஆயிரத்து 870-ஐ யாரோ ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுத்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, சூளைமேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஸ்ரீவாசலு ரெட்டி (வயது 27) என்பவரை கைது செய்தனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். இவரிடம் இருந்து, 64 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் கவனகுறைவாக தங்களது ஏ.டி.எம். கார்டுகளை விட்டு சென்றால் அவற்றை நைசாக எடுத்து சென்று ஸ்வைபிங் மெஷின்கள் மூலம் குறிப்பிட்ட ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்து இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஸ்ரீவாசலு ரெட்டி, விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.