பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டுகளை மாற்றி நூதன மோசடி; மத்திய அரசு ஊழியர் கைது

பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டுகளை மாற்றி நூதன மோசடி செய்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். 271 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-11 21:53 GMT

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 16-வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜாக்குலின் (வயது 24). இவர், அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 6-ந் தேதி இவர், எம்.கே.பி.நகர் அம்பேத்கர் கல்லூரி சாலை எதிரே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று, தனது புதிய ஏ.டி.எம். கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகி, புதிய கடவுச்சொல் போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பின்னால் நின்றிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபரிடம், உதவி கேட்டார். உடனே அந்த நபர், ஜாக்குலினிடம் இருந்த ஏ.டி. எம். கார்டை வாங்கி, புதிய கடவுச்சொல்லை தயார் செய்து கொடுத்து விட்டு மீண்டும் அவரிடம் அந்த ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். ஜாக்குலின் அதை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

ரூ.40 ஆயிரம்

சிறிது நேரத்தில் ஜாக்குலின் வங்கி கணக்கில் இருந்த ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாக்குலின், தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அது தனது கார்டு இல்லை. போலி என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர்தான் ஏ.டி.எம். மையத்தில் தனக்கு உதவி செய்வதுபோல் நடித்த நபர், போலி ஏ.டி.எம். கார்டை தன்னிடம் கொடுத்து விட்டு, ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டை எடுத்துச் சென்று, அதன் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து நூதன மோசடி செய்திருப்பதை உணர்ந்தார். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் அவர் புகார் செய்தார்.

மத்திய அரசு ஊழியர்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி. எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பெரம்பூர் பாரதி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் பேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

மேலும் அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தபோது பல்வேறு வங்கிகளை சேர்ந்த 271 போலி மற்றும் ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டுகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பிரபுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று மேலும் தீவிரமாக விசாரித்தனர்.

பல இடங்களில் கைவரிசை

அதில் பிரபு, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் நிற்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடம் இருந்து ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டை திருடிவிட்டு, அதற்கு பதிலாக தன்னிடம் இருக்கும் போலி கார்டை கொடுத்து நூதன மோசடி செய்துவந்தது தெரிந்தது.

இவ்வாறு பல மாதங்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பிரபு, இதுபோல் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. பிரபுவை கைது செய்த போலீசார், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்