தாம்பரம் சானடோரியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஐதராபாத்தில் இருந்து எச்சரித்ததால் பணம் தப்பியது
தாம்பரம் சானடோரியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இதனை ஐதராபாத்தில் இருந்து எச்சரித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகம் எதிரே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் மர்மநபர்கள் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
இதனை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஐதராபாத்தில் உள்ள தலைமை அலுவலக ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தாம்பரத்தில் உள்ள அந்த வங்கியின் அதிகாரி ராஜபெருமாள் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அந்த பகுதியை சுற்றிலும் தேடி பார்த்தனர்.
அப்போது அங்கு கையில் சுத்தி, திருப்புலி உள்ளிட்ட பொருட்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சீர்காழியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 22), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணிகண்டன் (20), பொத்தேரியை சேர்ந்த அன்பழகன் (20), சோழிங்கநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (20) என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. 4 பேரையும் தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏ.டி.எம். மையத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக ஐதராபாத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.