கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ரூ.14 லட்சம் தப்பியது
கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அலாரம் ஒலித்ததால் ரூ.14 லட்சம் தப்பியது.;
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி (எஸ்.பி.ஐ) ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து அதிலிருந்து பணத்தை திருட முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால் அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடி விட்டனர்.
அதே சமயத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படுவது குறித்து மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விரைந்து வந்தனர். திருட்டு சம்பவம் தொடர்பாக துப்பு துலக்கிட மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவான கைரேகை தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கையுரை அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அப்போது தெரியவந்தது. கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.14 லட்சம் தப்பியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அறிவுறுத்தலின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை சேகரித்தும் துப்பு துலக்கி வருகின்றனர்.