ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் திருட முயன்ற வாலிபர் கைது

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் திருட முயன்ற போது அபாய ஒலி எழுப்பியதால் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-04-08 18:45 GMT

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் திருட முயன்ற போது அபாய ஒலி எழுப்பியதால் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏ.டி.எம். எந்திரம்

மயிலாடுதுறை, திருவாரூர் சாலையில் சீனிவாசபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எமில் இருந்து கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று அபாய ஒலி ஒலித்துள்ளது.

சத்தம் கேட்டு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்து வாலிபர்கள் ஓடிச்சென்று ஏ.டி.எம். மையத்தில் பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்மநபர் ஒருவர் தப்பியோடியதை அவர்கள் கண்டனர். மேலும் ஏ.டி.எம். வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவும் திருடப்பட்டு, அறையில் இருந்த கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம். அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த மர்மநபரின் உருவம் பதிவாகி இருந்தது.

இதையடுத்து கேமராவில் பதிவான மர்மநபரின் உருவப்படத்தை வைத்து மயிலாடுதுறை திருவிழந்தூர் சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

தப்பி ஓட்டம்

விசாரணையில், அவர் மயிலாடுதுறை அருகே உள்ள கோடங்குடியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திகேயன் (வயது 23) என்பதும் ஏ.டி.எம்மை உடைத்து திருட முயன்றது அவர் தான் என்பதும் தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். அறையிலிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தபோது அபாய ஒலி ஒலித்ததால் பயந்துபோய் தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து வங்கியின் கிளை மேலாளர் கோகிலவாணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கார்த்திகேயனைக் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.    

Tags:    

மேலும் செய்திகள்