விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக பஸ்களை நிறுத்திய டிரைவர்களை எச்சரித்த டி.எஸ்.பி. தொடர்ந்து கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவு

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக பஸ்களை நிறுத்திய டிரைவர்களை டி.எஸ்.பி. எச்சரித்தார். மேலும் அவர், தொடர்ந்து கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Update: 2023-08-24 19:50 GMT

விருத்தாசலம், 

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் கடலூர், சிதம்பரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் மார்க்கமாக செல்லும் பஸ்களை நிறுத்துவதற்காக தனித்தனி கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் டிரைவர்களோ அந்தந்த கட்டைகளில் பஸ்களை நிறுத்துவதில்லை. மாறாக தாங்கள் விரும்பும் இடத்தில் பஸ்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள்.

அதுமட்டுமின்றி வரிசையாக குறிப்பிட்ட இடத்தில் பஸ்களை நிறுத்துவதில்லை. பஸ் டிரைவர்கள் அந்தந்த ஊருக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள் பஸ் எங்கே நிற்கிறது என்று தெரியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் அடுத்தடுத்த பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வரமுடியாமலும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலையும் இருந்தது. இதனால் பயணிகள், பஸ் நிலைய வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. மேலும் இது தொடர்பாக விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன.

எச்சரிக்கை

இந்த நிலையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், பஸ் நிலையத்துக்கு வந்து திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பஸ்களை தாறுமாறாக நிறுத்தி இருந்த டிரைவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார். மேலும் அவர், ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்துமாறும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பஸ்களை உரிய இடங்களில் நிறுத்தாமல் தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் பஸ்களை உரிய இடங்களில் நிறுத்துவதை கண்காணிக்க பஸ் நிலையத்தில் அமைந்துள்ள புறநகர் போலீஸ் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால் போலீசார் பஸ் நிலைய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பஸ்களை அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் பயணிகள், பஸ் நிலைய வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்