விளாத்திகுளம் தபால் அலுவலகத்தில் இந்தியில் தகவல் பலகை வைத்ததால் பரபரப்பு
விளாத்திகுளம் தபால் அலுவலகத்தில் இந்தியில் தகவல் பலகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
எட்டயபுரம்:
விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தற்போது ஆதார் திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த அலுவலகத்துக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய முழுமையான தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் அதற்கான வழிமுறைகளும் இந்தி மொழியில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழ் மொழியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.