விழுப்புரம் ஷோரூமில்ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிய ஊழியர் கைது

விழுப்புரம் ஷோரூமில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-12-28 18:45 GMT

சென்னை மடிப்பாக்கம் 6-வது தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு (வயது 52). இவர் விழுப்புரம்- திருச்சி சாலையில் உள்ள ஒரு செல்போன் ஷோரூமில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இந்த கடையில் விற்பனையாளராக விக்கிரவாண்டி தாலுகா கணபதிப்பட்டை சேர்ந்த ராமசாமி மகன் தமிழரசன் (21) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ்பாபு, அந்த கடையில் ஆடிட்டிங் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பல்வேறு வகையிலான விலை உயர்ந்த 26 செல்போன்கள் வரவு, செலவு கணக்கில் வராமல் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 830 ஆகும்.

இதுகுறித்து அவரும், அந்நிறுவன அதிகாரிகளும் விசாரித்ததில் மேற்கண்ட செல்போன்களை தமிழரசன் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்பாபு, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 26 செல்போன்களையும் தமிழரசன் திருடிச்சென்று குறைந்த விலைக்கு பலரிடம் விற்பனை செய்ததும், இதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்தை வைத்துக்கொண்டு சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்கவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த பணத்தை கைப்பற்றினர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்