வரண்டியவேல்-அகோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
வரண்டியவேல்-அகோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தென்திருப்பேரை:
வரண்டியவேல்-அகோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
புதிய வகுப்பறை கட்டிடம்
குரும்பூர் அருகே வரண்டியவேல் - அகோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி வளர்ச்சி குழு தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு பொருளாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேஷ் துரைசிங் வரவேற்று பேசினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளி புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல் கல்வெட்டை திறந்து வாழ்த்துரை வழங்கினார். பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முகசேகரன், தொழிலதிபர்கள் பாலசுந்தரம், முத்துக்குமார், பரமசிவன், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி, கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய வளைகாப்பு விழா
இதேபோன்று, தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குளிர்ச்சி குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி சுருதி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள் மற்றும் அவரது சொந்த செலவில் 200 பெண்களுக்கு இலவச சேலையும் வழங்கினார்.
மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், ஆத்தூர் நகர செயலாளர் எம்.பி.முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகராஜ் நன்றி கூறினார். முன்னதாக ஆத்தூர் வந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு
முன்னதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் இருந்து ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் வந்தார்.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளருக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் மேள தாளம் முழங்கவும், வாண வேடிக்கையுடனும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரசேகர், இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.