உத்தமபாளையத்தில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்:நாளை நடக்கிறது
உத்தமபாளையத்தில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-வது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் மின் வடிவிலான முறையில் பெற்றுள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்கள் புதிய மின் வடிவிலான சான்றிதழ் பெறுவதற்கும், புதிதாக பழங்குடியினர் என சாதிச் சான்றிதழ் பெற விரும்பும் நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அனைத்து நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.