உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனம்-பஸ் மோதல்; சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலி 2 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் சரக்கு வாகனம்- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-09-07 14:35 GMT

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் காட்டுராஜா(வயது 30). இவர் செங்குறிச்சியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்தார். காட்டுராஜா கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒலி, ஒளி அமைப்பதற்காக நேற்று இரவு சரக்கு வாகனத்தில் சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே சரக்கு வாகனத்தில் செங்குறிச்சிக்கு புறப்பட்டார். அவருடன் செங்குறிச்சியை சேர்ந்த விஜய், விக்ரம் ஆகியோரும் வந்தனர்.

மோதல்

உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்த சென்னையில் இருந்து திட்டக்குடி சென்ற பஸ்சும், இவர்கள் வந்த சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. மேலும் சரக்கு வாகனத்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த காட்டுராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விஜய், விக்ரம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் மற்றும் விக்ரம் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காட்டுராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்