உடன்குடி வாரச்சந்தையில்காய்கறிகள் விலை குறைந்தது

உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை குறைத்து விற்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வாரச்சந்தையில் தக்காளி விலை ரூ.20-க்கும், மற்ற காய்கறிகள் விலை குறைத்து விற்கப்பட்டதால் கிராம மக்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாங்கி சென்றனர்.

வாரச்சந்தை

உடன்குடி வாரச்சந்தையில் கடந்த சில மாதங்களாக சந்தையிலுள்ள கடைகளில் மிக குறைந்த அளவே காய்கறிகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதுவும் காய்கறிகள் விலை மிக உச்ச விலையில் விற்கப்பட்டது. இதனால் சந்தைக்கு சுற்றுவட்டார கிராம மக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி வரத்து குறைந்த அளவே இருந்ததுடன், விலையும் அதிகரித்து விற்கப்பட்டது. இதேபோன்ற பெரும்பாலான காய்கறிகளின் விலையும் அதிகரித்து விற்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக கடைகளில் தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுகாலையில் வழக்கம் போல் வாரச்சந்தை கூடியது. ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் காய்கறிகள் மலைபோல குவித்து வைக்கப்பட்டு விற்கப்பட்டன.

தக்காளி கிலோ ரூ.20

காய்கறிகளின் விலை வெகுவாக குறைத்து விற்கப்பட்டதால், சுற்றுவட்டார கிராமமக்கள் ஆர்வத்துடன் குவிந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். குறிப்பாக கிலோ தக்காளி ரூ.20-க்கு விலை குறைத்து விற்கப்பட்டது. முன்பெல்லாமல் எண்ணிக்கை விலையில் விற்கப்பட்டு வந்த தக்காளியை நேற்று கிலோ கணக்கில் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் நேற்று சந்தையில் விலை அதிகரித்து விற்கப்பட்டது. மேலும், பீன்ஸ், இஞ்சி விலை குறையவில்லை.

காய்கள் விலை

மற்ற காய்களின் விலை வருமாறு: கிலோ முருங்கைகாய் ரூ.18. கத்தரிக்காய் ரூ.22, வெண்டைக்காய் ரூ.26, முட்டைகோஸ் ரூ.24, உருளைக்கிழங்கு ரூ.28, பல்லாரி ரு.36, பீட்ரூட் ரூ.38, சீனி அவரக்காய் ரு.36, பாகற்காய் ரூ.46, புடலங்காய் ரூ.44, மிளகாய், கேரட், சின்ன வெங்காயம் ஆகியவை ரூ.60, பீன்ஸ் ரூ.120, இஞ்சி ரூ.300-க்கும் விற்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்