திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.;

Update: 2022-08-26 09:27 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆவணித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

ஆவணித்திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா காலங்களில் தினசரி சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருநாளான நேற்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடந்தது.

முதலில் காலை 6.15 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து 6.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து 6.50 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளி இருந்த தேர் புறப்பட்டது. வெளி வீதி நான்கிலும் பவனி வந்து 7.45 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. பின்னர் 7.50 மணிக்கு வள்ளி அம்பாள் தேர் புறப்பட்டு 8.20 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

தேரோட்டத்தில், திருச்செந்தூர் கோவில இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி, தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், வரதராஜன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமலிங்கம் ஆதித்தன், பகவதி ஆதித்தன், தனிக்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வசந்தராஜ ஆதித்தன், சண்முகநாத ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தீபாராதனை

ஆவணித்திருவிழாவின் 11-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவ மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு இரவு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

மஞ்சள் நீராட்டு திருக்கோலம்

12-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்