தூத்துக்குடி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தூத்துக்குடி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1.42 லட்சம், தங்க நாணயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-03-15 18:45 GMT

தூத்துக்குடி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1.42 லட்சம், தங்க நாணயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நகரமைப்பு அலுவலகம்

தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி பெறுவதற்காக பணம் வாங்குவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால், தணிக்கை குழு அலுவலர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 4.30 மணி அளவில் நகரமைப்பு அலுவலகத்துக்கு வந்தனர்.

திடீர் சோதனை

அவர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர். அனைத்து அலுவலர்களும் வெளியில் யாரையும் தொடர்பு கொள்ளாதபடி தொலைபேசி அழைப்புகளை துண்டித்தனர்.

அதுபோல் அலுவலகத்துக்கு வந்த சில பொதுமக்களையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போலீசார், அந்த அலுவலகம் மற்றும் அலுவலர்களின் கார்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ரூ.1.42 லட்சம் பறிமுதல்

அப்போது, அங்கு சூப்பிரவைசராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவரின் காரில் இருந்து ரூ.1 லட்சம், அலுவலகத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற அலுவலர்களிடம் இருந்து எந்த தொகையும் கைப்பற்றப்படவில்லை.

அதேநேரத்தில் அலுவலகத்தில் பொதுமக்களில் ஒருவர் வைத்து இருந்த ஒரு தங்க நாணயத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி நகரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்