தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில்வருமானவரி அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2023-09-20 18:45 GMT

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அனல் மின்நிலையம்

அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு சென்று மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்நிலையங்களுக்கு தேவையான கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உபகரணங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கி உள்ளது. இதில் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித்துறையினர் நேற்று அந்த நிறுவனங்கள் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அனல் மின்நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வ.உ.சி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் லிங்க் கன்வேயர் பெல்ட் மற்றும் துறைமுகத்தில் உள்ள 1-வது கரித்தளம் மறு சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்த கன்வேயர் பெல்ட்டை அந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும். அதன்படி பராமரிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறது.

வருமானவரி அதிகாரிகள்

இந்த பணிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா?, வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் 3 கார்களில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நேற்று காலை 6 மணியளவில் வந்தனர்.

அவர்களில் 3 பேர் மட்டும் அனல் மின்நிலையத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். மற்றவர்கள் வ.உ.சி. துறைமுகம் கரித்தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர், அனல் மின்நிலைய அதிகாரிகள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆவணங்கள் பறிமுதல்

அதேபோன்று லிங்க் கன்வேயர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களை பெற்றனர். அனல் மின்நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரி அதிகாரிகளின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்