திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2022-07-13 09:30 GMT

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடையும். பவுர்ணமியொட்டி இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கடந்த ஓரிரு தினங்களாக திருவண்ணாமலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பகலில் பரவலாக வெயில் அடித்தது. இதனால் பகலில் நேரத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள் தரை சூடு தாங்க முடியாமல் நிழலை தேடி, தேடி சென்று கிரிவலம் சென்றனர்.

மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்