தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்:பொதுமக்கள் சாலை மறியல்

தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிகள் 2-வது நாளாக நடந்தது. அப்போது அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-10-14 18:45 GMT

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி நேற்று முன்தினம் அதிரடியாக தொடங்கியது.

முதல் நாளில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொக்லைன் எந்திரங்கள், கிட்டாச்சி எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

சாலை மறியல்

பழைய பஸ் நிலையம் எதிரே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டண கழிப்பிடங்கள், வணிக கட்டிடங்கள், பங்களாமேட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் எதிரே விநாயகர் கோவில் சுவர், அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் அப்பகுதியில் வாய்க்காலில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அங்கு பல ஆண்டுகளாக கம்பீரமாக இருந்த கட்டிடங்கள் சில மணி நேரங்களில் தரைமட்டமாகின.

பங்களாமேட்டில் 32-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாய்க்காலில் அமைக்கப்பட்ட தெருப் பாதை, வீடுகளின் படிக்கட்டுகள் போன்றவற்றையும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் இந்த பாதையை அகற்றினால் தங்களுக்கு வேறு பாதை வசதி இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பலரும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து மதுரை சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த மக்களிடம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்குவாதம்

மதுரை சாலையில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள பகுதியில் முறையாக நில அளவீடு செய்யாமல் கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்று கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் வலியுறுத்தினர். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நாராயணபாண்டியன் அங்கு வந்து முறையாக அளவீடு செய்யாமல் கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்