பெருந்துறையில் உள்ள மாதிரி பள்ளிக்கூடத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை

பெருந்துறையில் உள்ள மாதிரி பள்ளிக்கூடத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

Update: 2023-10-20 21:21 GMT

பெருந்துறையில் உள்ள மாதிரி பள்ளிக்கூடத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

மாணவர் சேர்க்கை

பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளிக்கூடம் எனும் எலைட் பள்ளிக்கூடம், விடுதி வசதியுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறந்த மாணவ-மாணவிகளை தேர்வு செய்து பள்ளிக்கூட வகுப்புகளுடன் போட்டி தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கான முழு செலவையும் அரசு ஏற்று உள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டத்துக்கான மாதிரி பள்ளிக்கூடம் பெருந்துறையில் உள்ள பழனிச்சாமி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்புகளுக்கு மட்டுமே சேர்க்கை நடந்தது. இங்கு பிளஸ்-2 படித்த 60 பேர் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு மாநிலங்களில் தற்போது படித்து வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் 9, 10-ம் வகுப்புகளுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

விடுதி வசதி

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு எலைட் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் விஜயன் கூறும்போது, 'நடப்பு கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் 9-ம் வகுப்புக்கு 80 பேரும், 10-ம் வகுப்புக்கு 160 பேரும், பிளஸ்-1-க்கு 120 பேரும், பிளஸ்-2-க்கு 160 பேரும் என மொத்தம் 520 மாணவ- மாணவிகள் சேர்த்து கொள்ளப்படுவர். இதில் தற்போது வரை 350 பேர் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிக்கூடங்களில் படித்த சிறந்த மாணவர்களை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்வு செய்து எலைட் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுகின்றனர். இங்கு 14 வகையான நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவ -மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி உள்ளது. தரமான உணவு வழங்கப்படுகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்