மாட்டைகவுண்டன் கோவிலில்உருவாரபொம்மை வைத்து வழிபாடு
மாட்டைகவுண்டன் கோவிலில் உருவாரபொம்மை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில் மாட்டைகவுண்டன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காணும் பொங்கலையொட்டி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் மாட்டை கவுண்டன்சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பக்தர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்கவும், செல்வம் பெருகவும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
கோவில் வளாகத்தில் ஆடு, கோழி, மாடு போன்ற உருவார பொம்மைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அதைத் தொடர்ந்து கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வீடுகளுக்கு கொண்டு சென்று பட்டிகளில் தெளித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கால்நடைகளின் காவல் தெய்வமாக மாட்டேகவுண்டன் சாமி உள்ளார்.
கால்நடைகள் நோய் தாக்காமல் இருக்க வேண்டுதல் நிறைவேறியதால் 600 முதல் 700 வரை ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தப் பட்டது.
இந்த கோவில் தீர்த்தத்தை கால்நடைகளை அடைக்கும் பட்டிகளில் தெளித்தால் அம்மை நோய், கோமாரி நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்காது என்பது ஐதீகம் என்றனர்.