மளிகை கடைக்காரர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
சாத்தான்குளம் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மளிகை கடைக்கார பெண்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சங்க தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கவேல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் ெஜயராணி தனது குடும்பத்துடன் ஈரோடு அணைக்கட்டு ஆலம்பட்டி வலசு பகுதியில் வசித்து வருகிறார். அங்கு அவர் மளிகை கடையும் நடத்தி வந்துள்ளார்.
மேலும் ஊருக்கு செல்வதற்கு முன் தனது 100 பவுன் தங்க நகைகளை சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாயார் சண்முககனி அம்மாளிடம் கொடுத்து, சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் வைக்கும்படி கூறிச் சென்றார். அவரும் நகைகளை லாக்கரில் வைத்துள்ளார்.
கோவில் கொடை விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பிரமணியபுரத்தில் கோவில் ெகாடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜெயராணி தனது குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். அப்போது, கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் உள்ள தனது 100 பவுன் நகைகளை வாங்கி பயன்படுத்தினார்.
பின்னர் திருவிழா முடிந்ததும் நகைகளை தனது தங்கை மகள் பவித்ரா தேவியிடம் கொடுத்து கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் வைத்துவிடும்படி கூறிச் சென்றார். ஆனால், அவர் நகைகளை வாங்கி வீட்டில் இருந்த பீரோவில் வைத்தார்.
100 பவுன் கொள்ளை
கடந்த 2-ந் தேதி கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் வைப்பதற்காக வீட்டு பீரோவில் இருந்த நகைகளை எடுக்க பவித்ரா தேவி சென்றார். அப்போது, பீேரா கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக ஜெயராணிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயராணி உடனடியாக சுப்பிரமணியபுரத்திற்கு திரும்பினார். தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அவர், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.
பரபரப்பு தகவல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது, வீட்டின் கதவு, பீரோ கதவு உடைக்கப்படாமல் இந்த கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இதனால் வீட்டிற்கு அடிக்கடி வரும் நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
எனினும் வேறு யாரேனும் மர்மநபர்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.