திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில்விரதம் இருக்க அனுமதிக்காதது ஏன்?: அமைச்சர் விளக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில்விரதம் இருக்க அனுமதிக்காதது ஏன்? என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-10-21 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதிக்காதது ஏன்? என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து உள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கொட்டகைகள், கோவில் உள்பிரகாரங்கள், நாழிக்கிணறு பஸ்நிலையம் பகுதி, கழிப்பிட வசதி அமைக்கும் இடங்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்காலிக பந்தல்கள்

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. 380 கழிப்பிடங்களும், 81 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், 19 இடங்களில் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 4 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

31 இடங்களில் கண்காணிப்பு கோபுரம், 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படும். கடற்கரையில் 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 2,700 போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவில் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 650 பேர் சுகாதாரப்பணியில் ஈடுபடுவர். குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் மின்சார வசதிகளை கண்காணிக்க ஒவ்வொரு துறைக்கும் என இணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒரு பைசா கூட கேட்கவில்லை

தங்கத்தேரில் சிறு சிறு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்திட்ட வளாகப்பணிகளும் தற்போது நடைபெறுகிறது. இதனால் தங்கத்தேர் உலா குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்கப்படும்.

எச்.சி.எல். நிறுவனம் கோவிலில் திருப்பணி செய்ய அவர்களுடைய பங்குத்தொகை ரூ.200 கோடி, இந்து சமய அறநிலையத்துறையின் பங்குத்தொகை ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடியில் திருப்பணிகள் செய்யப்படுகின்றன. அவர்கள் சொந்தப்பணத்தில் திருப்பணி செய்வதற்கு அரசுக்கு ஏன் கமிஷன் தர வேண்டும்? இந்த திட்டத்துக்கு எப்படியாவது இடையூறு செய்து, பணியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அவதூறுகள் கிளப்பி விடப்படுகின்றன. சுவாமி அய்யப்பன், சுவாமி முருகன் சாட்சியாக எச்.சி.எல். நிறுவனத்திடம் ஒரு பைசா கூட கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி மறுப்பது ஏன்?

அவரிடம், 'பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி மறுப்பது ஏன்?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் முக்கியமா? அல்லது 400 நபர்கள் மட்டும் கோவில் உள்ளே 6 நாட்களும் தங்குவது முக்கியமா? விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தரமான முறையில் கோவில் வளாகத்தில் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறை வேறு. அப்போது வந்த பக்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாகத்தான் இந்த ஆண்டு கோவில் உள்ளே பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை' என்றார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறநிலைய கூடுதல் ஆணையர் திருமகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொன்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாசில்தார் சுவாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வெற்றிவேல்முருகன், சுப்பிரமணியன், உதவி மின்பொறியாளர் முத்துராமன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்