சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-13 21:49 GMT

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறங்களில் உள்ள கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 400 மீட்டர் தொலைவுக்கு கரைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டதும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஏராளமானோர் ஒன்று திரண்டு வாய்க்காலில் பணி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர். வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டால் போராட்டம் மீண்டும் ெதாடங்கப்படும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறி ெசன்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வேடசின்னானூர் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணி நேற்று காலை தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு பணி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர் வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை கோட்ட அலுவலர் பொங்கியண்ணன், உதவி பொறியாளர் சுரேஷ் பாலாஜி, புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்