தபால் அலுவலகங்களில்பெண்களுக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம்:கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தபால் அலுவலகங்களில் பெண்களுக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தேனி கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Update: 2023-04-17 18:45 GMT

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு அனைத்து தபால் அலுவலகங்களிலும் 'மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்' என்ற பெயரில் பெண்கள் நலன் காக்க அதிக வட்டியுடன் கூடிய பிரத்யேக சேமிப்பு திட்டத்தினை கடந்த 1-ந்தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பெண்கள் மட்டுமே தொடங்கக்கூடிய திட்டம் ஆகும். இத்திட்டத்தில் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேரலாம். இதற்கான வட்டி வீதம் 7.5 சதவீதம். இத்திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.

ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு தொடங்கி 3 மாதங்கள் ஆன பின்னர் அடுத்த கணக்கை தொடங்கலாம். சேமிப்பு பணத்தில் 40 சதவீதம் ஒரு ஆண்டுக்குப் பின் எடுக்கும் வசதி உள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்கு பிறகு, முன் முதிர்வு செய்தால் குறைந்தபட்ச வட்டி 5.5 சதவீதம் கிடைக்கும்.

கணக்குதாரர் அல்லது பாதுகாவலர் இறந்தாலோ அல்லது கடும் நோய்வாய்ப்பட்டாலோ உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கை முன்னதாக முடித்துக் கொள்ளலாம். இத்திட்டம் 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை மட்டுமே. தேனி மாவட்ட பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்