ஓகைப்பேரையூரில், அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

ஓகைப்பேரையூரில் 10 ஆண்டுகளாக சேதமடைந்து உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-22 18:45 GMT

கூத்தாநல்லூர்:

ஓகைப்பேரையூரில் 10 ஆண்டுகளாக சேதமடைந்து உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுபனையனார் ஆறு

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் நடுபனையனார் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குறுகலான சிமெண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தினை ஓகைப்பேரையூர், ராமானுஜமணலி, நாகராஜன்கோட்டகம், பூந்தாழங்குடி, மூலங்குடி, வடபாதி, கலிமங்கலம், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பாலம் அமைந்துள்ள இடம் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற நகரப்பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

100 ஆண்டுகளை கடந்த பாலம்

இந்த நிலையில் 100 ஆண்டுகளை கடந்த இந்த பாலம் தற்போது வழுவிழந்தும், சேதமடைந்தும் உள்ளது. இந்த பாலத்தில் முதலில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு, தடுப்பு தூண்கள் சேதமடைந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பக்கம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் முழுமையாக ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாலம் ஆபத்தான பாலமாகவே காணப்படுகிறது.

இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டது. மேலும், இந்த வழியாக சென்று வரக்கூடிய வாகனங்கள் பாலத்தை கடந்து சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அகலமான புதிய பாலம்

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருவோர்களில் சிலர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விபத்தில் சிக்கி உள்ளனர். இதனால் இந்த சேதமடைந்த பாலத்தால் பெரிய அளவில் ஏதும் விபத்து ஏற்படுமோ என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த குறுகிய பாலத்தை இடித்து அகற்றி விட்டு, அகலமான புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்