தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.-அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2022-07-23 11:20 GMT

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள 44-வது ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு லோகோவை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஒலிம்பியாட் செஸ்போட்டி

அகில இந்திய செஸ் கழகம் சார்பில் சென்னை மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ்போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் 189 நாடுகளிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து, அந்த மாணவர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு, சதுரங்க சங்கங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து துறை சார்பாகவும் செஸ் விளையாட்டு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

செஸ் லோகோ திறப்புவிழா

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முக்கியமான பகுதிகளில் செஸ் விளையாட்டு குறித்த பதாகைகள், லோகோக்கள் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது முத்துநகர் கடற்கரையில் லோகோ, ராட்சத பலூன், பெரிய அளவிலான செஸ் காயின், செல்பி புகைப்படத்தளம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.

இவற்றை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

செஸ் விளையாடினர்

மேலும் கனிமொழி எம்.பி.அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள பெரிய அளவிலான செஸ் காயினில் சதுரங்கம் விளையாடினர்.

நிகழ்ச்சியில், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரம் முதல் பக்கிள் ஓடை வரை 6 கி.மீ. அளவில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை எம்.பி. மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்