மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.16721) தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16722) கோவையில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இதற்கிடையே, கோவையில் இருந்து நேற்று மதியம் புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு இரவு 7.40 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயில் மீண்டும் இன்று (வியாழக்கிழமை) காலை மதுரையில் இருந்து கோவை புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு சென்று சக்கரங்கள், பிரேக்குகள், பெட்டிகள் ஆகியவற்றை சரிபார்ப்பது வழக்கம். இந்த ரெயிலை ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று இரவு 8.30 மணிக்கு மதுரை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து ரெயிலை ஓட்டிக்கொண்டு ஷண்டிங் பணியாளர்கள் போடி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து போடிக்கு திரும்பும் தண்டவாள பகுதியில் தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயிலின் கடைசி பெட்டியான, கார்டு பெட்டியின் ஒரு சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம்புரண்டது. இதனால் அந்த ரெயிலை அங்கிருந்து இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ரெயில்நிலையத்தில் உள்ள அபாய சங்கும் ஒலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அனைத்து பிரிவு பணியாளர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ரெயில் பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், வழக்கமான ரெயில்கள் இயக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் போடியில் இருந்து மதுரை வழியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயில் நேற்று இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.