கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 292 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 292 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-10-20 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனி செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை யாசிரியர் ஜான் கணேஷ் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகரசபை தலைவர் கா. கருணாநிதி கலந்து கொண்டு 292 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளரும், நகரசபை துணைத் தலைவருமான ஆர்.எஸ். ரமேஷ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உருவான நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பொது மற்றும் பள்ளிகள் அளவில் கராத்தே போட்டி நடந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமை தாங்கி பரிசு வழங்கினர்.

போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் கார்த்தி விக்னேஷ் 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் மற்றும் கேடயமும், 5 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் செய்யது ஷாஜித் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் பொருளாளர் ரத்னராஜா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தாழையப்பன், பால்ராஜ், பள்ளி முதல்வர் பிரபு, கராத்தே மாஸ்டர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்