கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணி தொடங்குவது எப்போது?-பயணிகள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணி தொடங்குவது எப்போது? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணி தொடங்குவது எப்போது? என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிணத்துக்கடவு ரெயில் நிலையம்
கோவை-பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு ரெயில் நிலையம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றி 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி தற்போது இந்த வழித்தடத்தில் கோவையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கோவைக்கு 2 ரெயில்களும், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 2 ரெயில்களும், அதேபோல் வாரத்தில் 2 முறை சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கும் 2 ரெயில்கள் என மொத்தம் 6 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நடைமேடை மேம்பால பணி
இப்படி பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் எண்ணிக்கை கூடினாலும் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணி டெண்டர் விடப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படாமல் இருப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் 3 ரெயில்கள் நிற்கும் அளவிற்கு ரெயில்வே தண்டவாளங்கள் உள்ளன. ரெயிலில் பயணிகள் ஏறுவதற்கு வசதியாக 2 நடைமேடைகள் உள்ளன. இதற்கிடையே ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல வசதியாக பயணிகள் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலக்காடு ரெயில்வே கோட்டம் சார்பில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்திருந்தது.
அதன்படி டெண்டர் விடப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து ரெயில்வே பயணிகள் நல சங்கம், அரசியல் பிரமுகர்கள் பாலக்காடு ெரயில்வே கோட்டத்திடம் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை மேம்பாலம் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்று கூறப்படுகிறது.
விபத்து அபாயம்
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வழியாக தற்போது 6 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ெரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை மேம்பாலம் பணி இன்னும் நடைபெறவில்லை.
இதனால் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல தண்டவாளங்களில் இறங்கி ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
இதுகுறித்து பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:- 'கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் செலவில் பயணிகள் நடைமேடை மேம்பாலம் கட்டப்படுகிறது. ஒரு சில நிர்வாக காரணங்களால் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டுக்குள் விரைவில் நடைமேடை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி முடிக்கப்படும்' என்றனர்.