கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Update: 2022-11-17 18:30 GMT

கார்த்திகை மாதம்

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் அதிகாலை முதலே அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அந்தவகையில் நேற்று கரூரில் உள்ள கரூர் பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் அய்யப்பனுக்கு பால், நெய், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

மாலை அணிவித்து...

தொடர்ந்து அய்யப்ப பக்தர்களுக்கு, குருசாமி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தியுடன் கார்த்திகை விரதத்தை சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் பசுபதீஸ்வரா அய்யப்பா சேவா சங்கம் செய்திருந்தது.

கிருஷ்ணராயபுரம்-தோகைமலை

கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூர் காவிரி ஆற்றங்கரையோரத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சரிபமலை அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து ஒவ்வொறாக மாலை அணிந்து கொண்டனர். இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை தொடங்கினர்.

இதேபோல் தோகைமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான சபரிமலை அய்யப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர். இவர்கள் நேற்று முதல் தங்கள் விரத்தை தொடங்கினர். பின்னர் அவர்கள் குருசாமி முன்னிலையில் இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்