காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த மக்காச்சோளத்தை தின்ற காட்டு யானை
காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த மக்காச்சோளத்தை தின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த மக்காச்சோளத்தை தின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரப்பள்ளம் சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. ஆசனூர் வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியை யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன.
பழுதாகி நின்றது
மேலும் அந்த வழியாக செல்லும் லாரிகளில் இருந்து சாலையில் வீசப்படும் கரும்புகளை கடந்த சில மாதங்களாக தின்று பழகிய யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் மெக்கானிக்கை அழைத்து வர லாரி டிரைவர், அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏறி சத்தியமங்கலத்துக்கு சென்றுவிட்டார். இதனால் இரவு முழுவதும் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகிலேயே லாரி நின்று கொண்டிருந்தது.
மக்காச்சோளத்தை சுவைத்த யானை
இதனிடையே நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தது. பின்னர் அந்த யானை, பழுதாகி நின்ற மக்காச்சோள லாரியின் அருகே சென்றது. இதையடுத்து லாரியில் போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை துதிக்கையால் கிழித்து எறிந்ததுடன், அதில் இருந்த மக்காச்சோள மூட்டைகளை துதிக்கையால் வெளியே தூக்கியது. பின்னர் அதில் இருந்த மக்காச்சோளத்தை தின்ன தொடங்கியது.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 1 மணி நேரம் சாைலயில் நின்றபடி மக்காச்சோளத்தை சுவைத்த யானை, பிறகு தானாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.