குப்பிச்சிப்பாளையத்தில்பள்ளிக்கூடம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குப்பிச்சிப்பாளையத்தில் பள்ளிக்கூடம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கேசரிமங்கலம் ஊராட்சி குப்பிச்சிப்பாளையத்தில் அங்கன்வாடி மையம், தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதாக கூறப்படும் இடத்துக்கு வந்தனர். மேலும் இதுகுறித்து அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'இங்குள்ள பள்ளிக்கூடம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க குழி தோண்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் அருகில் செல்போன் கோபுரம் அமைப்பதால், அதன் கதிர்வீச்சு, பள்ளிக்குழந்தைகளை பாதிக்கும் என அச்சப்படுகிறோம். மேலும் பள்ளிக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி இல்லை. ஆனால் இங்கு எந்தவித முன் அனுமதியும் இன்றி செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏற்கனவே இதுகுறித்து பவானி போலீஸ் நிலையம், மற்றும் தொடக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து உள்ளோம்,' என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.