கயத்தாறு தாலுகா அலுவலகத்தில்மூதாட்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் விவசாய நிலத்தில் உயரழுத்த மின்கம்பி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய நிலத்தில்...
கோவில்பட்டி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பு மனைவி சீனியம்மாள் (வயது 75). இவரது மருமகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் உயர் மின்னழுத்த கம்பிகளை கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இதனால் மனமுடைந்த சீனியம்மாள் நேற்று காலையில் கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
தனது மருமகன் நிலத்தில் உயர்அழுத்த மின்கம்பி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என உரக்க கத்தியவாறு அலுவலக வாசலில் அவர் உட்கார்ந்தார்.
அவர் திடீரென்று களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் அலுவலர்களும் ஓடிச்சென்று அவரை மீட்டு அலுவலக காரில் ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.