எட்டயபுரம் இளம்புவனத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

எட்டயபுரம் இளம்புவனத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-17 18:45 GMT

கடன் தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் எட்டயபுரம் தாலுகா இளம்புவனம் பஞ்சாயத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருகிறோம். இதுவரை வங்கிகள் மூலம் றெ்ற கடன் தொகையை முறையாக செலுத்தி உள்ளோம். தற்போது அரசு அறிவித்து உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற கடன் தொகை தள்ளுபடி என்று அரசு அறிவித்து இருந்தது. இந்த கடன் தள்ளுபடி எங்களுக்கு கிடைக்கவில்லை. இளம்புவனம் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறிய நகைக்கடன், பயிர்க்கடன் ஆகியவற்றை மட்டும் தள்ளுபடி செய்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளோம். ஆகையால் எங்களுக்கு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பதிலாக, மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், 2013, 2017, 2019, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள அரசாணை 149-ன்படி நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். மற்ற அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணியமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரிம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்விலும் மதிப்பெண் முறையையே பின்பற்றுகிறது. ஆகையால் அரசாணை 149-ஐ விரைந்து செயல்படுத்தி நியமன தேர்வு நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த அன்னமணி தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எனது கணவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் வேறு திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி வருகிறார். எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் எங்களை மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

நடவடிக்கை

சிவபாரத இந்து மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த மனுவில், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கவும், நீர் அசுத்தமாவதை தடுக்கவும் மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.4 வழிச்சாலையில் போதுமான வெள்ளை பட்டை கோடுகள் இல்லை. ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களின் நடுவே செடிகள் வளர்க்கப்படவில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதே போன்று அல்லிகுளம் பஞ்சாயத்து பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 12 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், தலைவர் கலைச்செல்வி மாநிலக்குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட குழு உறுப்பினர் முனீசுவரி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர். குற்றவாளிகள் தப்பித்து விடாமல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள், ஜாமினில் வெளியில் வரமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுமையாக கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்