ஈரோட்டில் ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது; 8½ பவுன் நகை மீட்பு

ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8½ பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2022-07-18 22:07 GMT

ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8½ பவுன் நகை மீட்கப்பட்டது.

செவிலியர்

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருடைய மனைவி சாத்தூன்பீ (வயது 62). இவர் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீர்உசேன் இறந்துவிட்டார். இதனால் சாத்தூன்பீ தனது மகள் பாத்திமா பர்வீனுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி சாத்தூன்பீ வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அதன்பிறகு 15-ந் தேதி அவர் ஈரோடு திரும்பினார். அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலையில் நகைகளை அணிவதற்காக பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை பெட்டியை அவர் திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 9¼ பவுன் நகைகளை காணவில்லை. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டின் கதவு, ஜன்னல், பீரோ எதுவும் உடைக்கப்படாமல் இருந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் சாத்தூன்பீ புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் யாரோ மர்மநபர் வீடு புகுந்து பீரோவை திறந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. எனவே சாத்தூன்பீ வீட்டுக்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், தேவராஜ் மற்றும் போலீசார் கொல்லம்பாளையம் ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி ஒருவர் நடந்து வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கைது

விசாரணையில் அவர் ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆனந்தகுமார் (25) என்பதும், அவரிடம் தங்க நகைகள் இருந்ததும் தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்ததால், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆனந்தகுமார் வீடுகளில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததும், சாத்தூன்பீ வீட்டுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று கழிப்பறையை சுத்தம் செய்து வந்ததும், அப்போது அவரது வீட்டில் இருந்து நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும், சாத்தூன்பீவிக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் கொஞ்சம், கொஞ்சமாக 9¼ பவுன் நகையை அவர் திருடியதும் அம்பலமானது. இதைத்தொடர்ந்து ஆனந்தகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8½ பவுன் நகையை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்